கேரளா ஸ்டோரி படத்திற்கு விருதா? தேசிய விருதுக்குழு கேரளாவை அவமதித்துள்ளது: கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: மலையாள படங்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. விருது பெற்ற கலைஞர்களை பாராட்டுகிறேன். ஆனால் பொய்களால் புனையப்பட்ட தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விருது வழங்கப்பட்டதில் சங்பரிவாரின் அஜெண்டா இருக்கிறது. கேரளாவை அவமானப்படுத்துவதற்கும், மதவாதத்தை பரப்புவதற்கும் தான் இந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத ஒற்றுமைக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும் செயல்பட்ட இந்திய திரைப்படத்தின் பாரம்பரியத்தை தேசிய விருது குழு சிதைத்து விட்டது. ஒவ்வொரு மலையாளியும், நாட்டில் ஜனநாயகத்தை நேசிப்பவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். மதவாதத்தை வளர்ப்பதற்காக கலையை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான கே.சி.வேணுகோபால் கூறுகையில், தி கேரளா ஸ்டோரி குப்பை தொட்டியில் போட வேண்டிய படமாகும், இந்த அவமானத்தை கேரளா ஒருபோதும் சகித்து கொள்ளாது என்றார். கேரள எதிர்க்கட்சி தலைவர் சதீசன் கூறுகையில், ‘தேசிய சினிமா விருதுகளிலும் பாஜ வெறுப்பு பிரசாரத்தை குறிவைத்து வருகிறது. மத வெறுப்பை தூண்டும் ஒரே நோக்கத்துடன் தான் இந்த படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ வேட்டை நடத்துகின்ற சங்பரிவாரும், பாஜ ஆட்சியாளர்களும் தேசிய சினிமா விருதையும் அரசியலாக்கி விட்டனர்’ என்றார்.