ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு அன்புமணி இரங்கல்!
மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இந்தியாவில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்னிகரற்ற தலைவர்களில் ஒருவரான சிபு சோரன் அவரது 18-ஆம் வயதில் பொது வாழ்க்கைக்கு வந்து பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். பழங்குடியின மக்களின் நிலங்களை பெரும் பணக்காரர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்காக அவர் நடத்திய போராட்டங்களும், இயக்கங்களும் வரலாற்று சிறப்பு மிக்கவை.
அதேபோல், 1972-ஆம் ஆண்டில் வினோத் பிகாரி மகதோ, ஏ.கே. ராய் ஆகியோருடன் இணைந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அமைப்பை உருவாக்கிய சிபு சோரன் 28 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு ஜார்க்கண்ட் தனி மாநிலம் அமைவதற்கு காரணமாக இருந்தார். அந்த மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறையும், மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் எனது சகாவாகவும் திறம்பட பணியாற்றியவர் சிபு சோரன் அவர்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது அவருக்கு எப்போதும் பற்று உண்டு.
சிபு சோரன் அவர்களை இழந்து வாடும் அவரது புதல்வரும், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ஜார்க்கண்ட் மாநில மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.