ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்பட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி –II/IIA தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி –II/IIA தேர்விற்கு (Combined Civil Services Examination- II Group II And IIA Services) (தொகுதி – II ற்கு 50 காலிப்பணியிடங்களும், தொகுதி –IIA விற்கு 595 காலிப்பணியிடங்களும்) மொத்தம் 645 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 15.07.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பு தரம் ஆகும். இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் 01.08.2025 முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை- 32, கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக (அலுவலக வேலை நாட்களில்) அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள். மேலும், விவரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறுமாறு சென்னை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.