சிறையிலிருந்து வந்த கணவன் வெறிச்செயல்; நண்பர்களுடன் சேர்ந்து மனைவி கூட்டுப்பலாத்காரம்: சேலத்தை சேர்ந்த குற்றவாளி குஜராத்தில் கைது
சூரத்: குஜராத்தில் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த கணவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கொடூரமாகத் தாக்கி, கூட்டுப் பலாத்காரம் செய்து, தாபி ஆற்றில் வீசிக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த கணேஷ் ராஜ்புத் (35) என்பவர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன், ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தனது மனைவிக்கு வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார். அதனால் ஏற்பட்ட தகராறால், மனைவியை கம்பு மற்றும் சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளார். மறுநாள் காலை, அவரும் அவரது கூட்டாளி மகேஷும் சேர்ந்து அப்பெண்ணைக் கடத்தி, ஒரு வாடகை அறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், இரும்புக் குழாயால் தலையில் தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். பின்னர், மேலும் இரண்டு நண்பர்களை வரவழைத்து, நால்வரும் சேர்ந்து அப்பெண்ணின் கை, கால்களைக் கட்டி தாபி ஆற்றில் வீசிக் கொல்ல முயன்றுள்ளனர். இருப்பினும், படுகாயங்களுடன் மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய அந்தப் பெண், கபோதரா காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கபோதரா காவல்துறையினர், குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான கணேஷ் ராஜ்புத், தமிழ்நாட்டின் சேலம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஆவார். அவர் மீது ஏற்கனவே சூரத்தில் 26 கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. மற்ற குற்றவாளிகள் உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய துணை ஆணையர் அலோக் குமார், இவ்வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தனது மனைவிக்கு வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட கணவன், மனைவியை கம்பு மற்றும் சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளார். மறுநாள் காலை, அவரும் அவரது கூட்டாளி மகேஷும் சேர்ந்து அப்பெண்ணைக் கடத்தி, ஒரு வாடகை அறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.