இமாச்சலில் கடந்த ஒரு மாதத்தில் கனமழை தொடர்பான பாதிப்புகளால் 164 பேர் உயிரிழப்பு..!!
இமாச்சல்: இமாச்சலில் கடந்த ஒரு மாதத்தில் கனமழை தொடர்பான பாதிப்புகளால் 164 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இமாச்சலின் மண்டி பகுதி உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை கோடி தீர்த்து வருகிறது. இதனால் மண்டி, காங்க்ரா, சம்பா மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. மண்டி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
சண்டிகர்- மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மண்டி-குல்லு இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன. சேரும், சகதிகளுக்கும் இடையே கார்கள் உருக்குலைந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. ஏராளமான வீடுகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இதுவரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் மண்டி நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.