கூகுள்பே, போன்பே பயன்படுத்துறீங்களா?: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!
டெல்லி: வங்கி கணக்கு இருப்பை சரிபார்த்தல் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் யு.பி.ஐ.யில் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யு.பி.ஐ., இந்தியாவில் வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றங்களை செய்ய உதவும் ஒரு அமைப்பாக உள்ளது. இந்தக் காலத்தில், மக்களிடையே யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளது.
கையில் ஒரு பைசா பணம் இல்லாமல் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தற்போது சென்று விட்டு வர முடியும் அளவுக்கு அனைத்து இடங்களிலும் யுபிஐ பயன்பாடு அதிகரித்துவிட்டது. பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை ஸ்கேன் செய்தே பணத்தைச் செலுத்திவிட முடியும். யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவையாகவும் உள்ளன. யுபிஐ சேவைகளை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது புதிய விதிகளை தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், யு.பி.ஐ.,யில் புதிய விதிமுறைகளை என்.பி.சி.ஐ. அறிவித்துள்ளது. கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட வங்கி கணக்கை கையாளும் அனைத்து செயலிகளிலும், இந்த விதிமுறைகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு; யுபிஐ செயலிகள் மூலம் வங்கிக் கணக்கு இருப்பை (பேலன்ஸ்) ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். இதேபோல், மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே அணுக முடியும். இந்த வசதியை அடிக்கடி தேவையின்றி பயன்படுத்துவதைத் தடுக்கவே இந்த வரம்பு கொண்டுவரப்படுகிறது.
தானாகவே பணத்தைக் கழிக்கும் ஆட்டோ டெபிட் குறைந்த நேரங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்படும். அதாவது, பீக் நேரங்கள் எனப்படும் பரிவர்த்தனைகள் அதிகம் நடக்கும் நேரத்தில் ஆட்டோ டெபிட் செய்ய அனுமதி இல்லை. இதன்படி, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 9:30 வரையும் ஆட்டோ டெபிட் செய்ய அனுமதி இல்லை. யுபிஐ பயன்பாடு அதிகரித்துவிட்டதால், அதன் நெட்வொர்க்கில் அதிக அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த விதிகள் கொண்டு வரப்படுகின்றன.