வரலாற்றில் முதன் முறையாக தங்கம் பவுனுக்கு ரூ.75 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்: கடந்த 5 நாட்களில் ரூ.2,160 உயர்வு; நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சி
தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், காசா மீதான இஸ்ரேலின் போர் மற்றும் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு உள்ளிட்டவற்றால் உலக பொருளாதாரத்தில் நிச்சயத்தன்மை நிலவி வருகிறது. இதனால் பலரும் தங்கத்தின் மீது முதலீடுகள் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் தங்கத்துக்கான மவுசு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து விலையேறி வருகிறது.
கடந்த ஜூன் 1ம்தேதி தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஒரு பவுன் ரூ.71,360-க்கு விற்பனையானது. அதிகபட்சமாக கடந்த 15ம்தேதி ஒரு பவுன் ரூ.74,560- க்கு விற்பனையானது. அதன்பிறகு தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி, கடந்த 5 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது.
ஜூலை 23ம்தேதி ஒரு பவுன் ரூ.75,040க்கும், ஜூலை 22ம்தேதி ஒரு பவுன் ரூ.74,280க்கும், ஜூலை 21ம்தேதி ஒரு பவுன் ரூ.73,440க்கும், ஜூலை 19ம்தேதி ஒரு பவுன் ரூ.73,360க்கும், ஜூலை 18ம்தேதி ஒரு பவுன் ரூ.72,880 என்று விற்பனையாகியுள்ளது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், புதிய உச்சமாக தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக அதிரடியாக புதன்கிழமையான நேற்று பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040-க்கும், கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.9,380-க்கும் விற்பனையாகிறது. ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்த நிலையில், நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.75,000 கடந்து விற்பனையாகி வருவது சாமானிய மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.