தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில் ஆய்வு கூட்டம்
இக்கூட்டத்தில், இயக்குநர் / பகிர்மானம், மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்துகொண்டனர். மாநிலத்தின் மின் விநியோக நிலை, வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் புதிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, கள அலுவலர்களுக்குப் பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன: வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில்,பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் மற்றும் மின்பாதைகளை உடனடியாகச் சீரமைத்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இயற்கை இடர்பாடுகளின் போது ஏற்படும் மின்தடைகளை உடனடியாகச் சரிசெய்யத் தேவையான உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் பணியாளர்களை அனைத்து மண்டலங்களிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வாரிய தலைவர் , வாரியத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், நுகர்வோர் திருப்தியை உறுதிப்படுத்தவும், தற்போதைய திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல் மற்றும் செயல்பாட்டில் உள்ள சவால்களைத் தீர்க்கும் பணிகளை விரைந்து முடித்தல் குறித்து முன்னுரிமையாக எடுத்துரைத்தார். முக்கியமாக நிலுவையில் உள்ள உயர் மற்றும் தாழ்வழுத்த மின் இணைப்பு விண்ணப்பங்களின் நிலை, முக்கிய தளவாட பொருட்கள் மற்றும் மனிதவளத்தின் தேவை, மாற்றியமைக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம் (RDSS) மூலம் செயல்படுத்தப்படும் ₹1500 கோடி மதிப்பீட்டில் 33/11 கிலோ வோல்ட் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், டர்ன்கீ முறையில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் திட்டங்கள், வருவாய் பெருக்கம் குறித்த செயல் திட்டங்கள், பீடரில் ஏற்படும் மின்தடை, மின்மாற்றிகளில் ஓவர்லோடு மற்றும் விபத்துத் தடுப்பு தொடர்பான சவால்கள், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேல்நிலை மின்கம்பிகளை புதைவட கேபிள்களா மாற்றும் பணிகளை விரைவுபடுத்துதல், மின்னகம் அழைப்புகள், சமூக ஊடக புகார்கள் மற்றும் பல்வேறு வகைகளில் பெறப்படும் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்களின் குறைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
மேலும் பிரதம மந்திரி சூரிய ஒளி மின்சார திட்டத்தின் கீழ் மேல்மாடி சூரிய மின்சார இணைப்புகளுக்கு அனுமதிகள் விரைந்து வழங்குதல் மற்றும் இதுவரையில் சோலார் பேனல் நிறுவும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்காத மின் நுகர்வோர்களை நேரடியாக தொடர்புகொண்டு, தகுதியான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க ஆலோசனை வழங்குமாறு எஎ இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. காற்று மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்தியாளர்களிடமிருந்து பசுமை எரிசக்தி உற்பத்திக்கான மின்தேவை மேலாண்மை கட்டணங்களை காலத்திற்கேற்ப வசூலித்தல் மற்றும் சரிசெய்தல், டெண்டர் முறைகள் இறுதி செய்வது, நீதிமன்ற நிலுவை வழக்குகள் மற்றும் தீர்ப்புகளின் மீதான உடனடி சட்ட ஆலோசனை மற்றும் துரித நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் பிற துறைகளுடன் உள்கட்டமைப்பு அனுமதிக்கான ஒருங்கிணைப்பு அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
தற்போது 12 மண்டலங்களில், 133 புதிய துணை மின் நிலையங்களுக்கும், ஏற்கனவே உள்ள துணை மின் நிலையங்களில் 52 புதிய மற்றும் கூடுதல் உயரழுத்த மின் மாற்றிகளை நிறுவும் பணிகளை உடனடியாக துவக்க முடிவெடுக்கப்பட்டு வரும் 10.08.2025 க்குள் டெண்டர் கோரும் பணிகளை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இறுதியாக, மாநில அளவில் விநியோகத் துறையின் செயல்திறன் மற்றும் பொறுப்புத்தன்மை அதிகரிக்கும் நோக்கில் அனைத்து அதிகாரிகளும் திட்டங்களை நேரத்தில் நிறைவேற்றவும், முன்நோக்கிய பார்வையின் அடிப்படையில் புகார் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், துறையினருடன் நேரடி கண்காணிப்பை தீவிரமாக்கவும், சேவை தரம் மற்றும் நுகர்வோர் திருப்தியை உயர்த்த நடவடிக்கை எடுக்கும்படி மீண்டும் வலியுறுத்தி உத்தரவிட்டார்.
‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையம் மூலம் பெறப்படும் புகார்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை உடனடியாகச் சரிசெய்து, பொதுமக்களுக்குத் திருப்திகரமான சேவையை வழங்க வேண்டும். மேலும், திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏற்படும் மின்தடை குறித்த விவரங்களை நுகர்வோருக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி (SMS) வாயிலாகத் தெரிவிப்பதை அனைத்து மேற்பார்வைப் பொறியாளர்களும் உறுதிசெய்யவேண்டும். மின் சேவைகள் மற்றும் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இக்கூட்டத்தில், பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் மரு. அனீஸ் சேகர், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர் (பகிர்மானம்) ஆ.ரா. மாஸ்கர்னஸ், இயக்குநர் பகிர்மானம் (நிதி) கே. மலர்விழி, பசுமை எரிசக்திக் கழக இயக்குநர் (தொழில்நுட்பம்) எஸ். மங்களநாதன், வாரிய செயலர் ஆர். தேவராஜ், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் மற்றும் மின் வாரிய தலைமையக உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.