ஆவணக் கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!!
தூத்துக்குடி: நெல்லையில் ஆவணக் கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகரை சேர்ந்த சந்திரசேகர், தமிழ் செல்வி ஆகியோரின் மூத்த மகன் கவின் செல்வகணேஷ் (27). சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 27ம் தேதி நெல்லை கேடிசி நகரில் காதல் தகராறில் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளை போலீசார் வழக்கு பதிந்து அவரது காதலியான பெண் சித்தா டாக்டரின் தம்பி சுர்ஜித்தை கைது செய்தனர். மேலும் கொலை செய்ய தூண்டியதாக அவரது பெற்றோர் ஆயுதப்படை எஸ்ஐக்களான சரவணன், கிருஷ்ண குமாரி ஆகியோர் மீதும் பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதைதொடர்ந்து எஸ்ஐக்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணவக் கொலை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கவினின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் தனியார் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கிவைக்க வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லையில் உள்ள கவினின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கவின் கொலை செய்யப்பட்டதற்கு அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.