ஒகேனக்கலில் 4 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி!
ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துக் காணப்பட்டதால் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 28,000 கன அடியாக குறைந்த நீர்வரத்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி மேலும் குறைந்து வினாடிக்கு 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்து குறைந்ததன் காரணமாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. சின்னாறு கோத்திகள் பரிசல் துறையில் இருந்து மணல் தீட்டு வரை பரிசல் இயக்க மட்டும், 4 நாட்களுக்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் குளிப்பதற்கான தடை தொடர்ந்து 5வது நாளாக நீடித்து வருகிறது.