தன்கர் ராஜினாமா ஏன்?.. குறைவான வெளிநாட்டு பயணமே ஒதுக்கீடு; அமெரிக்க துணை அதிபர் வந்தபோது தன்கர் அவமதிப்பு என தகவல்
டெல்லி: முந்தைய துணை ஜனாதிபதிகளை விட தன்கருக்கு குறைவான முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்தபோது தன்கருக்கு தெரிவிக்கவில்லை என்றும் புதிய தகவல்வெளியாகி உள்ளது. நீதிபதி பதவி நீக்க விவகாரம் காரணம் என கூறப்பட்ட நிலையில் ஏற்கெனவே தன்கர் அவமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .
தன்கருக்கு குறைவான வெளிநாட்டு பயணமே ஒதுக்கீடு
முந்தைய துணை ஜனாதிபதிகளை விட தன்கருக்கு குறைவான வெளிநாட்டு பயணம் ஒதுக்கீடால் அதிருப்தி என தகவல். ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றபோது துணை ஜனாதிபதிக்கான நெறிமுறை மீறப்பட்டதாகவும் புகார் எழுந்தது. வெளியுறவு அமைச்சக தகவலின்படி, இதுவரை தன்கர் 4 வெளிநாட்டு பயணங்கள் மட்டுமே மேற்கொண்டுள்ளார். தன்கருக்கு முன் இருந்த வெங்கய்ய நாயுடு 5 ஆண்டுகளில் 13 பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
புரோட்டோகால் பின்பற்றப்படாததால் தன்கர் அதிருப்தி
நெறிமுறைகள் மீறல் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் தன்கர் அலுவலகம் பல முறை புகார் அளித்துள்ளதாக தகவல். வெளியுறவு விவகாரத்தில் முந்தைய துணை ஜனாதிபதிகளை விட தன்கருக்கு குறைவான முக்கியத்துவம் என கருதியுள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் வந்தபோது தன்கர் அவமதிப்பு?
ஏப்ரலில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்தபோது தன்கருக்கு தெரிவிக்கவில்லை என்றும் புகார். வெளிநாட்டு துணை அதிபர்கள் இந்தியா வரும்போது துணை ஜனாதிபதியை சந்திப்பது வழக்கமான நடைமுறை. ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்தபோது தன்கரை சந்திக்காதது சர்ச்சையானது. ஜே.டி.வான்ஸ் வந்தபோது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக தன்கர் ஜெய்பூர் சென்றுவிட்டார். ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் படத்துடன், தமது புகைப்படம் இடம்பெறாததால் தனது புகைப்படம் அரசு அலுவலகங்களில் இல்லாதது குறித்து மே மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தன்கர் அதிருப்தி தெரிவித்தார்.