சிறுமியை 2 பேர் காதலிப்பதில் ஏற்பட்ட மோதல்; காரை ஏற்றி கல்லூரி மாணவரை கொன்ற மற்றொரு மாணவர் சரணடைந்தார்: வக்கீல் உள்பட சிலரை பிடிக்க தனிப்படை தீவிரம்
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு சொகுசு கார் அசுரவேகத்தில் வந்து மாணவர்கள் சென்ற மொபட் மீது மோதுவது பதிவாகியிருந்தது. இதில், மொபட்டுடன் விழுந்த மாணவர் நித்தின்சாய் தலையில் அடிபட்டு உயிரிழந்தது தெரிந்தது. இதுசம்பந்தமாக 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்திவந்தனர்.
ஒரு சிறுமியை 2 பேர் காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் நித்தின்சாய் காரை ஏற்றி கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை திருமங்கலம் சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே நியாயம் கிடைக்கவேண்டும் என்று இறந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் கீழ்பாக்கம் பிரதான சாலையில் நேற்று மறியல் நடத்தினர். அப்போது போலீஸ் உயரதிகாரிகள் வந்து, ‘’ விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து கொலை சம்பந்தமாக கல்லூரி மாணவர்கள் பிரணவ், சுதன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘’பிரணவ் 12ம் வகுப்பு படித்தபோது சிறுமியை காதலித்துள்ளார். அந்த சிறுமியை வெங்கடேசன் என்பவரும் காதலித்துள்ளார். இதுசம்பந்தமாக இரண்டு தரப்பினர் அடிக்கடி மோதிக்கொண்டுள்ளனர். பிரணவுக்கு ஆதரவாக அரசியல் பிரமுகரின் பேரனும் கல்லூரி மாணவருமான சந்துரு உள்ளிட்டோர் சொகுசு காரைவைத்து வெங்கடேசன் தரப்பில் வந்த கல்லூரி மாணவர்கள் மீது மோதியுள்ளனர். இதையடுத்து சொகுசு காரை வைத்து மோதியதாக சந்துரு, வழக்கறிஞர் ஆரோன் எட்வின் மற்றும் சுதன், பிரணவ் உள்ளிட்டவர்கள் மீது 109(1) கொலை செய்யும் நோக்கம், 296(தீ)ஆபாசமாக பேசுதல், 103 (1) கொலை செய்தல், 353(1) மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.இதுசம்பந்தமாக நித்தின்சாயின் தந்தை சுரேஷ் அளித்த புகாரின்படி, திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தினர்.
இதில், நித்தின்சாய் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது நித்தின்சாய், வெங்கடேசன் மற்றும் சில நண்பர்களை சந்துரு (20), பிரணவ் (20 )ஆகியோர் போனில் பேசியுள்ளனர். இதுதொடர்பாக நேரடியாக சண்டையிடுவதற்காக தனியார் பள்ளி அருகே இரண்டு தரப்பினரும் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது சிறுமியின் காதல் விவகாரத்தில் 2 பேரின் நண்பர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியுள்ளனர்.
அந்த சமயத்தில் சொகுசு காரில் வந்த சந்துரு, ஆரோன், பிரணவ், சுதன் மற்றும் எட்வின் ஆகிய ஐந்து பேர் காரில் இருந்துகொண்டே நித்தின்சாய், வெங்கடேசன், அவரது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென சந்துரு தரப்பினர் சொகுசு காரை வேகமாக ஓட்டி வெங்கடேசனின் காலில் மோதியுள்ளனர். இதன்பின்னர் அவர்கள், ‘’ இதில் யாரேனும் ஒருவரை போட்டு தள்ளினால்தான் நாம் யார் என்று தெரியவரும்’ என்று கூறியபடி தாறுமாறாக சொகுசு காரை இயக்கியுள்ளனர். அப்போது அங்கிருந்து மொபட்டில் தப்பிச்சென்ற நித்தின் சாய், அபிஷேக் ஆகியோர் மீது காரைவிட்டு வேகமாக மோதியதில் நித்தின் சாய் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அவரது நண்பர் படுகாயம் அடைந்துள்ளார். இவ்வாறு தெரியவந்தது.
இதன் அடிப்படையில், போலீசார் கொலை வழக்குபதிவு செய்து சந்துரு உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் கொலையாளிகள் கைது செய்யப்படாமல் இருந்ததால் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்கள், உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் திருமங்கலம் காவல்நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். திருமங்கலம் உதவி ஆணையர் பரமானந்தம் வந்து சமாதானப்படுத்தியதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அண்ணாநகர் துணை ஆணையர் உதயகுமார் தலைமையில் 6 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் மாணவர் சந்துரு இன்று அதிகாலை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சந்துருவை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.
கொலை செய்ய நினைக்கவில்லை; போலீசார் விசாரணையின்போது சந்துரு கூறியதாவது;
நான், சொகுசு காரில் பின்னால் அமர்ந்து சென்றேன். கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் காரை இயக்கவில்லை. காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு உதவி செய்ய சென்றேன். காரில் நண்பர்களுடன் பயணம் மட்டுமே செய்தேன். காரை நான் இயக்கவில்லை. ஆரோன் என்பவர்தான் காரை ஓட்டினார். பயமுறுத்துவதற்காக காரை இயக்கியதாகவும் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதிவிட்டது. இவ்வாறு சந்துரு தெரிவித்துள்ளார். இருப்பினும் பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.