ஓய்வுக்கு பின் அரசு பதவிகளை ஏற்க மாட்டேன்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி
டெல்லி: ஓய்வு பெற்ற பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர் போன்ற அரசுப் பதவிகளையோ அல்லது ஆணையங்களின் தலைவர் பதவிகளையோ ஏற்பது, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்த விவாதங்களை தொடர்ந்து எழுப்பி வருகிறது. இந்தச் சூழலில், இது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமாரின் பிரிவு உபசார விழாவில் பேசுகையில், ‘நான் ஓய்வு பெற்ற பிறகு எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்க மாட்டேன் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை ஒரு அரசியல்வாதியாக இருந்து ஆளுநராகப் பணியாற்றியவர்.
ஆனால் நான் நீதித்துறையைத் தேர்ந்தெடுத்தேன். எனது மனசாட்சியின்படி, நீதித்துறைக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பேன். எனது ஓய்வுக்கு பின்னர் எனக்கு அதிக நேரம் கிடைக்கும். அப்போது மகாராஷ்டிரா மாநிலம் தாராபூர், அமராவதி மற்றும் நாக்பூரில் அதிக நேரம் செலவிட முயற்சிப்பேன்’ என்று கூறினார். உச்ச நீதிமன்ற நீதிபதி கவாயின் இந்த அறிவிப்பு, சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீதித்துறையின் மாண்பையும், சுதந்திரத்தையும் நிலைநிறுத்தும் நேர்மறையான நடவடிக்கை என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.