வெளிநாட்டு இ-மெயிலில் சென்னை விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
இதுகுறித்து தகவலறிந்ததும் விமானநிலைய இயக்குனர் தலைமையில் சென்னை விமான நிலைய பாதுகாப்பு குழு கூட்டம் அவசரமாக நடந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் அதிரடி படையினர் மற்றும் மத்திய உளவு பிரிவினர் விடிய விடிய சென்னை விமானநிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், விஐபிக்கள் தங்கும் அறைகள், கழிவறைகள் மற்றும் சந்தேகப்படும் பொருட்களை மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டன.
அதோடு விமான நிலைய ஓடுபாதை பகுதி, விமானங்கள் நிறுத்துமிடம், விமானங்களுக்கு எரிபொருள்கள் நிரப்பும் பகுதி, விமானங்களில் சரக்கு பார்சல்களை ஏற்றும் இடங்கள், கார் பார்க்கிங் பகுதி ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். விமான பயணிகளிடம் வழக்கமான சோதனைகளோடு விமானம் ஏறுமிடங்களிலும் கூடுதல் சோதனை நடத்தப்பட்டன. சென்னை விமானநிலையத்தில் நேற்றிரவு தொடங்கிய வெடிகுண்டு சோதனை விடிய விடிய நடைபெற்றது.
இச்சோதனையில், விமானநிலைய பகுதிகளில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதனால், இது வழக்கமான புரளிதான் என்று பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கிடையே, விமானப் பயணிகளிடம் கூடுதல் சோதனை நடத்தியதால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய துபாய், சிங்கப்பூர், ஹாங்காங், இலங்கை, பிராங்க்பர்ட், தோகா, சார்ஜா உள்பட பல்வேறு வெளிநாட்டு விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் அதில் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இப்புகாரின்பேரில் சென்னை விமானநிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.