பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் இடமில்லை; எடப்பாடி பழனிசாமி நாகரீகமாக பேச வேண்டும்: முத்தரசன் எச்சரிக்கை
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தளியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பிரசார பயணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை காணவில்லை, தேய்ந்து போய்விட்டது. மறைந்து போய்விட்டது. முகவரியை தேடிக் கொண்டிருக்கிறோம் என கீழ்த்தரமான பேசினார். வரும் 18ம் தேதி சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மற்றும் பேரணி நடைபெற உள்ளது. அன்றைய தினம், எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை நிறுத்தி விட்டு, சேலத்தில் நடக்கும் பேரணியை பார்த்து இந்திய கம்யூனிஸ்ட் எப்படிப்பட்ட கட்சி என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த அரசியல் கட்சி தலைவரும், பிற கட்சி தலைவர்களையும், கட்சிகளையும் ஒருமையில் பேசுவது என்பது மிக மிக அநாகரீகமானது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, பிரசாரத்தில் தமிழக முதலமைச்சரையும், எங்கள் கட்சி தலைவர்களை பற்றியும் ஒருமையில் பேசி வருகிறார். இது அவர் வகித்த பொறுப்புக்கு அழகல்ல. அவர் நாகரீகமாக பேச வேண்டும். பாஜக ஒருபோதும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டும் என்பதற்காகத்தான், எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா வளைத்து பிடித்துள்ளார். மோடியும் அவரை திருச்சியிலே சந்தித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். சுய சிந்தனையோடு இருக்கிறார்கள். வகுப்புவாத சக்தியான, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமாக மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்படும் பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் அளிக்க மாட்டார்கள். வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.