மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் ஆக.19ம் தேதி முதல் விசாரணை நடத்தப்படும்
* உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு
புதுடெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து அனைத்து விவகாரத்திலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம், மற்றும் துணைவேந்தர் நியமனம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மூன்று வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தும்,
குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தும் இருந்த பத்து மசோதாக்களுக்கு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி ஒப்புதல் வழங்கியும், அதேப்போன்று மாநில அரசால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மூன்று மாதங்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு, சுமார் 14 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கான அதிகாரமான 143ஐ பயன்படுத்தி கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். இதைத்தொடர்ந்து மேற்கண்ட வழக்கில் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநில அரசுகள் தங்களது தரப்பு விளக்க மனுக்களை நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தது.
அதில்,” குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மூன்று மாதங்களில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு என்பது சரியான ஒன்று என்பதால், குடியரசு தலைவர் 14 கேள்விகளுக்கு விளக்கம் கேட்ட கடிதத்தை அவருக்கு மீண்டும் உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மற்றும் நீதிபதிகள் சூரியகாந்த் ,விக்ரம் நாத் ,நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்துருகர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,” இந்த விவகாரத்தில் ஒவ்வொரு தரப்பும் வாதம் செய்யும் அந்த கால வரம்பை நிர்ணயம் செய்து வழக்கின் விசாரணையை தொடங்க வேண்டும் என்றார்.அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் கொண்ட கடிதத்தை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று நாங்கள் தாக்கல் செய்துள்ள விளக்க மனுவில் தெரிவித்துள்ளோம்.
அதுகுறித்து விரிவாக வாதங்களை முன்வைக்க எங்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தார். கேரளா அரசு தரப்பிலும் இதே கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,” இந்த விவகாரத்தில் வரும் ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் அனைத்து தரப்பும் தங்களது எழுத்துப்பூர்வ வாதத்தின் சுருக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதையடுத்து வழக்கின் மீதான விரிவான விசாரணை ஆகஸ்ட் 19ம் தேதி முதல் தொடங்கும்.
நோடல் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களிடையே நேர அட்டவணையை ஒழுங்கமைக்க வேண்டும். அது கண்டிப்பாகப் பின்பற்றப்படும். மேலும் வழக்கறிஞர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் ஆட்சேபனை தெரிவிக்கும் கருத்துக்களை விசாரிப்போம். அதன் பிறகு, ஆகஸ்ட் 19, 20, 21, 26 ஆகிய தேதிகளில் அட்டர்னி ஜெனரல் மற்றும் ஒன்றிய அரசு தரப்பு வாதங்களை விசாரிப்போம். இந்த பரிந்துரையை எதிர்ப்பவர்கள் தரப்பு வாதங்கள் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 2, 3 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கேட்கப்படும்.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு தனது விரிவான பதிலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதில் ஏதேனும் மறுப்பு இருந்தால் அன்றைய தினம் அதாவது செப்டம்பர் 10ம் தேதியே அதுகுறித்து விசாரிக்கப்படும். அதன் பின்னர் வாதங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும். இதில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவை கவனமாக அனைத்து தரப்பும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.