பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடாளுமன்றம் 4வது நாளாக முடக்கம்
நேற்றும் மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி, சபையின் மையப்பகுதிக்குள் நுழைந்து, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, அவைக்குத் தலைமை தாங்கிய கிருஷ்ண பிரசாத் தென்னதி, கோவா சட்டப்பேரவையில் பட்டியல் பழங்குடியினருக்கு இடங்களை வழங்குவதற்கான மசோதாவில் பங்கேற்குமாறு உறுப்பினர்களை வலியுறுத்தினார்.
ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பியதால் ஆத்திரம் அடைந்த சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்,’ கோவாவில் பட்டியல் பழங்குடி மக்களுக்கு பயனளிக்கும் இந்த மசோதா குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார். போராட்டங்கள் தொடர்ந்து நீடித்ததால், அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவையிலும் இதே பிரச்னை எழுப்பப்பட்டது.
மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் ஆறு உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளித்த உடனேயே, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் விதி 267இன் கீழ் 30 அறிவிப்புகளை நிராகரித்தார். இந்த அறிவிப்புகள் அனைத்தும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் சார்பில் வழங்கப்பட்டவை. அவை துணைத்தலைவர் நிராகரித்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
இதனால் அவையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக, சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகலில் அவை மீண்டும் கூடியதும், கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்வதற்கான மசோதா, 2025 விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதா மீதான உரையை முடிக்க அதிமுக எம்பி எம். தம்பிதுரையை, அப்போது அவையை நடத்திய புவனேஸ்வர் கலிதா அழைத்தார். தம்பிதுரை பேசிக்கொண்டு இருந்த போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர்.
அவர் பேசி முடித்ததும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி அயோத்தி ராமி ரெட்டி மசோதாவைப் பற்றிப் பேசினார். அப்போது பாஜ எம்.பி. லட்சுமிகாந்த் பாஜ்பாய்,’உங்கள் அனுமதியுடன்தான் எம்.பி. பேசுகிறார், அவர்கள் அவரைத் தடுக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன்’ என்று அவைத்தலைவரிடம் கூறினார். அப்போது கார்கே பேச அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கூறினார். இதனால் அவையில் அமளி ஏற்பட 4வது நாளாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
* நாடாளுமன்றம் இயங்க மோடி அரசு விரும்பவில்லை
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில்,’ வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விவாதத்திலிருந்து மோடி அரசு தப்பித்து ஓடுகிறது. வழக்கம் போல, மோடி கூட்டணி நாடாளுமன்றத்தை சீர்குலைப்பதை செய்து வருகிறார்கள். மோடி அரசு நாடாளுமன்றம் இயங்குவதை விரும்பவில்லை’ என்றார்.
* தன்கருக்கு பிரியாவிடை அளிக்க வேண்டும்
துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கருக்கு மாநிலங்களவையில் பிரியாவிடை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற அவை நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தக் கோரிக்கையை எழுப்பினார். அவரது கோரிக்கைக்கு ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் பதிலளிக்கவில்லை.
* தப்புத்தப்பா பண்றாங்க பாஜ கிண்டல்
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த பதாகையில் ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என்பதற்கு பதில் தவறாக எழுதப்பட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளை கேலி செய்து, பாஜ ஐடி துறைத் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் பதிவில்,’ ஜனநாயகம் என்று கூட எழுதத் தெரியாதவர்கள் ஜனநாயகம் குறித்த பாடங்களைக் கொடுக்க வந்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* சோனியா தலைமையில் இந்தியா கூட்டணி போராட்டம்
பீகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பல எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி கட்சி, ஜேஎம்எம், ஆர்ஜேடி, இடதுசாரி கட்சிகள் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கூடி கோஷங்களை எழுப்பினர்.