பீகாரில் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல: தேர்தல் ஆணையம் விளக்கம்
இதற்கு முன், 7.89 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தீவிர திருத்தத்தின் மூலம் முதல் கட்டமாக 65 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளனர். இவர்கள் இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், கண்டறிய முடியாதவர்கள், பல இடங்களில் வாக்குப்பதிவு செய்தவர்கள் என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில், 36 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என தேர்தல் ஆணையம் கருதுகிறது. முதல்கட்ட பணிகள் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலே இறுதிப்பட்டியல் என தகவல்கள் வெளியாகி மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட விளக்கத்தில், ‘‘சில நபர்கள் வரைவு பட்டியலை இறுதிப் பட்டியல் என்ற தோற்றத்தை ஏற்படுத்த ஏன் முயற்சிக்கிறார்கள். தீவிர திருத்த நடவடிக்கையில் அப்படி குறிப்பிடப்படவில்லை. ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரையிலான ஆட்சேபனை காலத்தில் தகுதியான வாக்காளர்கள் தகுந்த ஆவணங்களுடன் சேர்க்கப்பட முடியும்.
இதற்காக அரசியல் கட்சிகள் அவர்களின் 1.6 லட்சம் பூத் ஏஜென்ட்களிடம் ஆட்சேபனை மற்றும் கோரிக்கை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ஏன் உத்தரவிடக்கூடாது?’’ என கூறி உள்ளது. அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பூத் ஏஜென்டுகளும் தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனைகள் தீர்க்கப்பட்ட பின் செப்டம்பர் 1ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.