பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்து வரும் 8ம் தேதி தேர்தல் ஆணையம் முற்றுகை
பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலை எழுப்பி வருகின்றன. சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகள் திருடப்படுவதாக குற்றம்சாட்டும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024 மக்களவை தேர்தலில் சுமார் 100 தொகுதிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில் வரும் 7ம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. இரவு விருந்துடன் நடக்கும் இக்கூட்டத்தில் பீகார் விவகாரம் மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன. துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்த நாள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணி நடத்தி முற்றுகையிட எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, 2 நாள் வார விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது. இதில் இரு அவைகளிலும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் நடத்த அழுத்தம் தரப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் 21ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கடந்த 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்தது. மற்ற அனைத்து நாட்களிலும் பீகார் விவகாரத்தால் இரு அவைகளும் முடங்கின.
இதே போல, இன்றும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்ய திட்டமிட்டுள்ளன. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் கூறுகையில், ‘‘விவாதத்திற்கு அழுத்தம் கொடுத்து எங்கள் போராட்டங்கள் தொடரும். அரசு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் இக்கூட்டத்தொடர் வீணாகவே முடியும். விவாதத்திற்கு பயந்து பாஜ கூட்டத்தொடரை சீர்குலைக்கிறது. நாடாளுமன்ற விதிகளை நாங்கள் அவர்களுக்கு கற்பிப்போம்’’ என்றார்.