பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம்
டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், இறந்தவர், இடம்பெயர்ந்தவர், இரட்டைப் பதிவு எனக் கூறி 52 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. பீகாரில், இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, ஜூலை 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 லட்சம் வாக்காளர்கள் இறந்ததும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 52 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.