அய்யலூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே, அய்யலூரில் இன்று நடந்த வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு, கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து ஆடு, கோழிகளை வாங்கிச் செல்வர்.
ஆடி மாதத்தில் தங்களது குலதெய்வம் மற்றும் காவல் தெய்வங்களுக்கு ஆடுகளை பலி கொடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இன்று ஆடி அமாவாசை என்பதால் அய்யலூரில் இன்று நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது. இன்று அதிகாலை முதலே ஆடுகளுடன் விவசாயிகள் குவிந்தனர். சந்தை கூடியதும் வியாபாரிகள் போட்டிபோட்டு ஆடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றனர். செம்மறி ஆடுகளை காட்டிலும் வெள்ளாடு விற்பனை அமோகமாக இருந்தது.
10 கிலோ வெள்ளாடு ரூ.8500க்கும், செம்மறி ஆடு ரூ.6500க்கும் விற்பனையாகின. இதுபோன்று நாட்டுக்கோழி தரத்திற்கேற்ப கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரையிலும், கட்டுச் சேவல்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையாகின. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘இன்று நடந்த ஆட்டுச் சந்தையில் விற்பனை நல்ல முறையில் இருந்தது. சந்தை துவங்கிய 4 மணிநேரத்தில் முடிந்தது. ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின’ என்றனர்.