அன்புமணியை நீக்க ராமதாஸ் முடிவா? ஆக. 17ல் பாமக சிறப்பு பொதுக்குழு: மகளுக்கு புதிய பதவி; அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு
இதையடுத்து அன்புமணி ஆதரவாளர்களான மாநில பொருளாளர் திலகபாமா, பொதுசெயலாளர் வடிவேல் ராவணன், சமூக நீதி பேரவை வழக்கறிஞர் பாலு மற்றும் மாவட்ட செயலாளர்கள் 82 பேரும், 62 பேரும் மாவட்ட தலைவர்கள், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் 3 எம்எல்ஏக்களின் கட்சி பதவி நீக்கினார். அவருக்கு போட்டியாக அன்புமணியும் நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி வழங்கினார். இதையடுத்து, இருவரும் தனித்தனியாக மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வந்தனர்.
இந்த சூழலில், ராமதாஸ் பெயரில் பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுக்கிணங்க பாமக சிறப்பு பொதுக்குழு வருகின்ற 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திண்டிவனம் புதுச்சேரி செல்லும் வழியில் பட்டானூரில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும். இந்த பொதுக்குழுவில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாமக தைலாபுரம் தலைமை நிலையத்திலிருந்து ராமதாஸ் லட்டர் பேடில் வெளியான இந்த அறிவிப்பில் யாருடைய கையெழுத்தும் இடம்பெறவில்லை. அன்புமணியின் செயலால் மிகுந்த மன உளைச்சலில் ராமதாஸ் இருப்பதாக தகவல் கசிந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென சென்னை புறப்பட்டுச் சென்றார் ராமதாஸ். அவர் மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி தேர்தல் ஆணையத்தின் முழு அங்கீகாரத்தை பெற ராமதாஸ் தடாலடி முடிவை எடுத்திருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு பொதுக்குழுவின்போது, அன்புமணி பாமகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார் என்றும், ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி பரசுராமன் நிர்வாக பொறுப்பில் புதியதாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பாமக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் அன்புமணி பங்கேற்காத இந்த சிறப்பு பொதுக்குழு செல்லுமா, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்களா அல்லது புறக்கணிப்பார்களா? என்பதை பொறுத்தே கட்சி முழுமையாக யார் பக்கம் என்பது நிரூபணமாகும் என கூறப்படுகிறது.