அதிமுக - பாஜ கூட்டணி அமைந்த பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியுடன் எடப்பாடி சந்திப்பு: ஓபிஎஸ், டிடிவி, அண்ணாமலை மீது குற்றச்சாட்டு
இதையடுத்து, தனியார் ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி தங்கினார்.
எடப்பாடி பழனிசாமியுடன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றனர். தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த, பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடம் நீடித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் பற்றி பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி விரிவாக எடுத்துரைத்ததாக தெரிகிறது.
கடந்த காலங்களில் தனக்கு எதிராக ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் செய்த சூழ்ச்சிகளை அவர் எடுத்து சொல்லியதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி கூறியதை அனைத்தையும், கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்று கேட்டாராம். உடனே எடப்பாடி பழனிசாமி, பேப்பர் ஒன்றில் பெயர்கள் அடங்கிய மனுவை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு வந்தார்.
* ஓபிஎஸ்சை சந்திக்க மோடி மறுப்பு
தூத்துக்குடியில் பிரதமர் மோடி சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டு அவர் கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கிடைத்தால் அது எனக்கு மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்’ என்று கூறி இருந்தார். ஆனால் கூட்டணியில் இல்லாதவர்களுக்கு சந்திக்க அனுமதிப்பதன் மூலம் கூட்டணியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். அவர்களும் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி என்று கூறுவார்கள்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று இருக்கும்போது அவர்கள் தனி அணியாக இருப்பது எப்படி. ஓபிஎஸ்சுக்கு நேரம் கொடுக்க கூடாது என்று எடப்பாடி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்சுக்கு நேரம் ஒதுக்கவில்லை. கெஞ்சாத குறையாக சந்திக்க நேரம் கேட்டும் பிரதமர் மோடி நேரம் ஒதுக்காததால், ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
ஏற்கனவே, சென்னை வந்த அமித்ஷாவும் ஓபிஎஸ்சை சந்திக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. பாஜவுடன் கூட்டணியில் இருப்பதாக கூறி வரும் ஓபிஎஸ்சை பாஜ தலைவர்கள் தொடர்ந்து சந்திக்க மறுப்பதால் கடும் மனவருத்தத்தில் உள்ளார். இதனால், ஓபிஎஸ் தனது சொந்த ஊரான பெரியகுளத்துக்கு சென்றுவிட்டார்.