தகாத உறவுக்காக மகன், மகளை கொன்ற அபிராமி, கள்ளக்காதலனுக்கு சாகும்வரை சிறை தண்டனை: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
விஜய் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் ஏஜென்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், டிக்-டாக் மற்றும் ரீல்சில் பிரபலமாக வலம் வந்த அபிராமி, பிரபல பிரியாணி கடையில் தொடர்ந்து பிரியாணி வாங்கி வருவதை வழக்கமாக வைத்து இருந்தார். அதனால், அவருக்கு பிரியாணி அபிராமி என்று பெயர் வந்தது. இந்த நிலையில், அவர் பிரியாணி வாங்கி வந்த கடையில் பணியாற்றிய மீனாட்சி சுந்தரம் என்ற சுந்தரம் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் துளிர்விடத் தொடங்கியது.
அபிராமி மீது சுந்தரம் காதல் வயப்படவே, அபிராமிக்கு அவர் இலவசமாக பிரியாணி கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. பிரியாணியில் தொடங்கிய இவர்களுடைய காதல், தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இது இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்துள்ளனர். அபிராமியின் குடும்பத்தினர், ‘உனக்கு திருமணம் நடந்துவிட்டது. குழந்தைகளும் இருக்கிறார்கள். இதுபோன்ற தவறான பாதைக்கு செல்லாதே’ என்று கண்டித்துள்ளனர்.
இதனால் அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் சென்னையைவிட்டு கேரளாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இருவரும், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேற அபிராமி முடிவு எடுத்தார். இந்த திட்டத்தை நிறைவேற்ற குன்றத்தூரில் உள்ள மருந்துக் கடையில் தூக்க மாத்திரைகளை வாங்கிய அபிராமி, அதை பாலில் கலந்து மூன்று பேருக்கும் இரவு கொடுத்துள்ளார். அஜய் உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார்.
இந்நிலையில், அபிராமி கேரளாவிற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்தபோது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மீது கொலை (302), கூட்டுசதி (120-பி), குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் (109) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கு கடந்த 15ம் தேதி நீதிபதி ப.உ.செம்மல் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சசிரேகா முக்கிய சாட்சிகள், மற்றும் சான்றாவணங்களை தாக்கல் செய்து வாதிட்டார். அபிராமியின் கணவர், உறவினர்கள், மீனாட்சி சுந்தரத்தின் நண்பர்கள், பிரியாணி கடை ஊழியர்கள் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிப்பளிப்பதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற அறைக்கு காலை 10.30 மணிக்கு வந்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். பின்னர் மதியம் தண்டனை விவரத்தை அறிவித்தார்.
அப்போது, பெற்ற குழந்தைகளை கொலை செய்த குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவத்தில் தாய் அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகிய 2 பேரும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள்தான். இருவருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்தால் நீதியின்பால் உகந்ததாக இருக்கும். எனவே, அபிராமிக்கு கொலை மற்றும் கூட்டுச்சதி குற்றத்திற்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், மீனாட்சி சுந்தரத்திற்கு கொலை, கூட்டு சதி, குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் இருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.
போலீசாருக்கு நீதிபதி எச்சரிக்கை
குற்றவாளிகளை காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென்று நீதிமன்றம் சார்பில் கூறப்பட்டது. ஆனால், குன்றத்தூர் போலீசார் மிகவும் தாமதமாக குற்றவாளிகளை அழைத்து வந்தனர். இதனால், நீதிபதி கோபமடைந்து ஏன் உங்களை குற்றவாளிகளாக சேர்க்கக்கூடாது என்றார்.
3 பிரிவுகளிலும் தண்டனை
அபிராமி மீது பதிவு செய்யப்பட்ட 3 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், மீனாட்சி சுந்தரம் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகளில் (கொலை, கூட்டுசதி, உடந்தை) ஒவ்வொரு பிரிவுக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனைதான்
விதிக்கப்படவேண்டும்: நீதிபதி கருத்து கள்ளக்காதலுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற அபிராமி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்தார். நீதிபதி தீர்ப்பு வாசிக்கும்போது, இருவரும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் தான் எனக்கூறி தனது அறைக்கு சென்று விட்டார். அபிராமி அந்த தீர்ப்பை கேட்டு கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் வயதான அப்பா, அம்மா இருக்கிறார்கள், என் தம்பி இருக்கிறான். கொஞ்ச நாட்கள் அவர்களுடன் நான் வாழ வேண்டும் என்று கண்ணீர் விட்டார். இதை தொடர்ந்து, மீனாட்சி சுந்தரமும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதை தொடர்ந்து, மீண்டும் வந்த நீதிபதி செம்மலை, உங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். இருந்தாலும் (காந்தியடிகள் சொன்ன சில பொன்மொழிகளை மேற்கோள் காட்டினார்) இருவரும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார்.