22 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் வாழ்நாள் சாதனையாளர் விருது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழா இலட்சினை மற்றும் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் காலண்டர் தொகுப்பினை வெளியிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையம் இன்றைக்கு 100 ஆண்டுகளை கடந்து இருக்கின்றது. அரசியல் சார்பற்ற, ஒரு கவுன்சிலை ஓராண்டு நடத்துவதே சிரமம். ஆனால், நீங்கள் நூறு ஆண்டுகளை கடந்து இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதத்தை பெருமளவு குறைத்து, இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் உங்களுடைய பங்களிப்பு தான்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்தி ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கின்ற மிகப் பெரிய திட்டத்தை உங்களுடைய ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் செவிலியர்களுக்கு பக்க பலமாக நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன், மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, நா.எழிலன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் தலைவர் ராஜமூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் தேரணிராஜன், தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் பதிவாளர் அனி கிரேஸ் கலைமதி, தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் துணைத்தலைவர் அனி ராஜா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.