மருத்துவக் கழிவு ஆலை திறக்க எதிர்ப்பு: மானாமதுரையில் இன்று கடையடைப்பு
மானாமதுரை: மானாமதுரை சிப்காட்டில் மருத்துவக் கழிவு தொழிற்சாலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. விருதுநகர் மாவட்டம், ஏ.முக்குளம் கிராமத்தில் மருத்துவக் கழிவு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, கருச்சிதைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏ.முக்குளம் கிராமத்தில் மருத்துவக் கழிவு தொழிற்சாலை மூடப்பட்டது.
ஆனால், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் வளாகத்தில் அந்த ஆலையை மாற்றும் பணி தற்போது நடைபெறுகிறது. இதற்காக சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு ஆலை கட்டுமான பணி முடிவடைந்து, அதை திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 13 மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்படும் உயிரி மருத்துவக் கழிவுகளை இந்த ஆலையில் சுத்திகரிப்பு என்ற பெயரில் எரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மானாமதுரை நகர மக்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன்படி மானாமதுரையில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. பால், குடிநீர், மருந்துக்கடை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், ஆலை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.