ஆசிய துப்பாக்கி சுடுதல் ரைபிள் 50மீ பிரிவில் சிப்ட் கவுருக்கு தங்கம்: அணி பிரிவிலும் இந்தியா சாதனை
ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, மகளிர் 50 மீட்டர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சாம்ரா அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிசன் தனிநபர் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை சிப் கவுர் சாம்ரா, சிறப்பாக செயல்பட்டு, 459.2 புள்ளிகள் குவித்தார்.
அதனால், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சீன வீராங்கனை யாங் யஜீ, 458.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிசன் அணி பிரிவில் இந்திய வீராங்கனைகள் சிப்ட் கவுர் சாம்ரா, அன்ஜும் மொட்கில், ஆஷி சோக்ஸி அடங்கிய அணி பங்கேற்றது.
இதில், சாம்ரா அபாரமாக செயல்பட்டு 589 புள்ளிகள் பெற்றார். ஆஷி 586 புள்ளிகள், அன்ஜும் 578 புள்ளிகள் பெற்றனர். அதனால், ஒட்டுமொத்தமாக 1753 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்த இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. ஜப்பான் மகளிர் அணி, 1750 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றது. தென் கொரியா அணி, 1745 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது.