சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான இன்போசிசுக்கு இன்று காலை அந்நிறுவனத்தின் ஈமெயிலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் இந்த நிறுவனத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து நிறுவனம் சார்பில் அருகில் உள்ள தாம்பரம், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து தாம்பரத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நிறுவனம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
அதே போல் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள மேட்டுக்குப்பம் என்ற பகுதியில் உள்ள ஐடி நிறுவனமான TCS நிறுவனத்திலும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதே போல் துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து ஓ.எம்.ஆர் சாலையில் 3 ஐடி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் ஐடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.