ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாக்.குடன் இந்தியா விளையாட சிவசேனா, ஆம்ஆத்மி எதிர்ப்பு
புதுடெல்லி: இந்திய வீரர்கள் எல்லையில் உயிர்த் தியாகம் செய்யும் போது, எதிரி நாடான பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது நாட்டுக்கே அவமானம் என்று உத்தவ் சிவசேனா மற்றும் ஆம்ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மும்பையில் நேற்று பேட்டியளித்த உத்தவ் தாக்கரே கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற உள்ளது. இதை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
பகல்காம் தாக்குதலில் காயம் இன்னும் ஆறவில்லை. இந்த போட்டியில் விளையாடுவது நம் நாட்டுக்கே அவமானம். நமது வீரர்கள் எல்லையில் உயிர்த்தியாகம் செய்யும் போது நாம் பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா? இந்த போட்டியை உங்களால் புறக்கணிக்க முடியாதா?. இதை கண்டித்து மகாராஷ்டிரா முழுவதும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு கூறினார்.
ஆம்ஆத்மி: ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாகிஸ்தானுடன் ஒரு போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தப் போட்டி நடக்கக் கூடாது என்று முழு நாடும் கூறுகிறது. பிறகு ஏன் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? இதுவும் டிரம்ப்பின் அழுத்தத்தின் கீழ் செய்யப்படுகிறதா? நீங்கள் ட்ரம்ப்புக்கு எவ்வளவுதான் தலைவணங்குவீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் திரையிட்டால் தடை செய்வோம்
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ், ‘பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த நமது பெண்களுக்கு இது மிகப் பெரிய அவமானம். ஆனாலும் நமது ஒன்றிய அரசு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. எனவே, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை தடை செய்ய வேண்டும். இந்தப் போட்டிகளை திரையிடும் கிளப்கள், பப்கள் மற்றும் உணவகங்களை ஆம் ஆத்மி தொண்டர்கள் எதிர்ப்பார்கள். மக்கள் அந்த கிளப்களுக்கு செல்லக் கூடாது. பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர்கள் நம் நாட்டின் பெண்களை மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் கேலி செய்கிறார்கள். ஆனால், நாம் அவர்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா? இது பாஜ அரசுக்கு அவமானம்’ என்று அவர் கூறினார்.