லண்டன் செல்ல அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டை நாடிய நடிகை ஷில்பா ஷெட்டி: ரூ.60 கோடி மோசடி வழக்கில் திருப்பம்
புதுடெல்லி: மோசடி புகாரில் சிக்கியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது சுமார் 60 கோடி ரூபாய் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக இருவருக்கும் எதிராகத் தேடப்படும் நபர் என்ற அடிப்படையில் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டு, அவர்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொழில்முறை பயணமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை இவர்கள் நாடியிருந்தனர்.
அப்போது, ‘சர்ச்சைக்குரிய 60 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்’ என நீதிபதிகள் கறாராகத் தெரிவித்ததால், அந்த மனுவை அவர்கள் திரும்பப் பெற்றனர். இந்நிலையில், தற்போது லண்டனில் வசிக்கும் ராஜ் குந்த்ராவின் பெற்றோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களை நேரில் சென்று பார்க்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால், பொழுதுபோக்குச் சுற்றுலாவிற்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்க முடியாது என்று நீதிமன்றம் ஏற்கனவே மறுத்திருந்தது.
ஆனால், தற்போது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் லண்டன் செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.