ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு: வங்கதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
டாக்கா: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதையொட்டி வங்கதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரிய வன்முறையாக வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை அடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
ஷேக் ஹசீனா பதவியை விட்டு விலகியதை தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்த பிறகு ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்பட பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டு கொல்ல ஹசீனா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பில் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐஜி ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு டாக்காவில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை சர்வதேச குற்ற தீர்ப்பாயம் இன்று அறிவிக்க உள்ளது. இதையொட்டி வங்கதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.