தமிழகத்தில் பாஜவுக்கு எதிரான மனநிலையே உள்ளது: சண்முகம் பேட்டி
ஓசூர்: தமிழ்நாட்டில் பாஜவுக்கு எதிரான மனநிலையே எப்போதும் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அவர் அளித்த பேட்டி: :சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத கருத்து கணிப்புகள் வருகிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி, கடந்த 2018ம் ஆண்டு முதல், கடந்த 8 ஆண்டுகளில் நடந்த 3 தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெற்றது. தொடர் வெற்றியை பெற்ற இந்த கூட்டணியில் இருந்து, எந்த கட்சிகளும் விலகவில்லை.
மாநில உரிமைகளை பறித்தது, கல்வி நிதியை தராதது என அனைத்து விதத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜ உள்ளது. அதனால், பாஜவுக்கு எதிரான மனநிலையே தமிழ்நாட்டு மக்களிடம் எப்போதும் உள்ளது. பாஜவோடு சேர்ந்ததால் அதிமுகவுக்கு பாதிப்பு உள்ளதே தவிர, வெற்றி கிடைக்காது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலை காட்டிலும், புதிதாக ஒன்றும் அதிமுகவினர் பலம் பெற்றுவிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.