தீயணைப்பு ஆணையத் தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்: தமிழ்நாடு அரசு
சென்னை: தீயணைப்பு ஆணையத் தலைவராக சங்கர் ஜிவாலை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக சங்கர் ஜிவால் உள்ளார். இவரது பணிக்காலம் நாளை மறுநாள் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த காவல்துறை இயக்குநர் யார்? என்பது குறித்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன் அடுத்த தமிழ்நாடு காவல் படை தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு அரசு சார்பில் வெளியிடப்படவில்லை என்றாலும் வெங்கட்ராமன் தான் அடுத்த டிஜிபி என அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதே நேரம் டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை வீட்டு வசதி நிறுவன டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகியோரின் பணிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் வார விடுமுறை என்பதால், தமிழ்நாடு காவல்துறை சார்பில் இருவருக்கும் இன்று மாலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். பொறியாளரான இவர், கடந்த 1990 ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தனது முதல் பணியை மன்னார்குடி உதவி எஸ்பியாக தொடங்கிய அவர், சேலம், மதுரை எஸ்பியாகவும், பிறகு திருச்சி போலீஸ் கமிஷனராகவும் சிறப்பாக செயல்பட்டார்.
பின்னர் ஒன்றிய போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், உளவுப்பிரிவு ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபியாக பணியாற்றினர். அதைதொடர்ந்து 2021ம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற அவர், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனராக சிறப்பாக பணியாற்றினர். பிறகு தமிழ்நாடு காவல்துறை படை தலைவராக கடந்த 2023ம் அண்டு ஜூன் 30ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தில் ரவுடிகள் ஒழிப்பு, சாதி கலவரங்கள் தடுத்தல், போதை பொருட்கள் எதிரான கடுமையான நடவடிக்கை எடுத்தார். இவரது காலக்கட்டத்தில் சில பிரச்னைகள் நடந்தாலும் அதை தனது அனுபவத்தினால் சுமுகமாக தீர்வுகண்டார். இவரது பணிக்காலத்தில் எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய டிஜிபியாக சங்கர்ஜிவால் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இதற்கிடையில் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். தீயணைப்பு ஆணையத் தலைவராக சங்கர் ஜிவாலை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.