ஷாங்காய் ஓபன் டென்னிஸ் திக்... திக்... த்ரில்லரில் தில்லாக வென்ற ரூனே: காலிறுதிக்கு முன்னேற்றம்
ஷாங்காய்: ஷாங்காய் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெரிகார்ட் உடனான 4வது சுற்றுப் போட்டியில் முன்னணி வீரர் ஹோல்கர் ரூனே த்ரில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். சீனாவின் ஷாங்காய் நகரில் ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டி ஒன்றில் பெல்ஜியம் வீரர் ஸிஸோ பெர்க் (26), கனடா வீரர் கேப்ரியல் டயலோ (24) மோதினர்.
முதல் செட்டில் சிறப்பாக ஆடிய கேப்ரியல் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் பெர்க் வசப்படுத்தினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் இருவரும் போட்டிக் கொண்டு புள்ளிகளை எடுத்ததால் டைபிரேக்கர் வரை நீண்டது. அதையடுத்து நீண்ட போராட்டத்துக்கு பின், 7-6 (10-6) என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை பெர்க் கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற பெர்க் காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் நோட்ஸ்கோ ரூனே, பிரான்ஸ் வீரர் கியோவன்னி எம்பெட்ஷி பெரிகார்ட் மோதினர். முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் ரூனே வசப்படுத்தினார். 2வது செட்டில் கடும் சவால் எழுப்பிய பெரிகார்ட், டைபிரேக்கரில் 7-6 (9-7) என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் ரூனே எளிதில் வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற ரூனே, காலிறுதிக்கு முன்னேறினார்.