ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அட்டகாசமாய் ஆடிய அலெக்ஸ் வெற்றிவாகை
ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். சீனாவின் ஷாங்காய் நகரில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 3வது சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் (26), போலந்து வீரர் கமில் மஜ்ஷ்ராக் (29) மோதினர். முதல் செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய அலெக்ஸ் 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டில் கமில் சவால் எழுப்பியபோதும் அதை சாமர்த்தியமாக முறியடித்த அலெக்ஸ் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் செக் வீரர் ஜிரி லெஹெக்கா (23), கனடா வீரர் டெனிஸ் விக்டரோவிச் ஷபலோவ் (26) மோதினர். இந்த போட்டியில் அற்புதமாக ஆடிய லெஹெக்கா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
⦁ வேகம் காயம் சோகம்: வெளியேறிய சின்னர்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜானிக் சின்னர் (24), டாலோன் கிரீக்ஸ்பூர் (29) மோதினர். இந்த போட்டியில் இரு வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் அசுர வேகத்தில் மோதினர். டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை, 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் சின்னர் வசப்படுத்தினர். 2வது செட்டிலும் போட்டி நிலவியது. அந்த செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் டாலோன் வென்றார். இதையடுத்து 3வது செட்டில், டாலோன் 3 புள்ளிகளும், சின்னர் 2 புள்ளிகளும் எடுத்திருந்தபோது, சின்னர் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். அதையடுத்து, டாலோன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.