ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ரூனே ருத்ர தாண்டவம்
ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் ஒற்றையர் 3வது சுற்று டென்னிஸ் போட்டியில் நேற்று, டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே, பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பெர்டை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். சீனாவின் ஷாங்காய் நகரில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே (22), பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பெர்ட் (27) மோதினர். போட்டியின் துவக்கம் முதல் அபாரமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய ரூனே, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீரர் டெய்லர் ஃப்ரிட்ஸ் (27), பிரான்சின் கியோவனி எம்பெட்ஷி பெரிகார்ட் (22) மோதினர்.
இப்போட்டியின் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் பெரிகார்ட் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் டெய்லர் சுதாரித்து ஆக்ரோஷமாக ஆடியபோதும் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டையும் பெரிகார்ட் கைப்பற்றினார். அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு எளிதில் தகுதி பெற்றார்.