ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு: எல்லை பிரச்னையை சுமுகமாக தீர்க்க உறுதி: இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த முடிவு
தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு காண இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். மேலும், இருதரப்பு வர்த்தக உறவை விரிவுபடுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
ஜப்பானில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு மத்தியில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றிருப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மாற்றத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எஸ்சிஓ மாநாடு தொடங்குவதற்கு முன்பாக, பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று காலை நடந்தது. சுமார் 55 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியும், அதிபர் ஜின்பிங்கும் விவாதித்தனர். அப்போது, இந்தியா, சீனா உறவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு எல்லையில் அமைதி நிலவுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டார். பரஸ்பர நம்பிக்கை, கண்ணியம் மற்றும் உணர்திறன் அடிப்படையில் உறவுகளை முன்னேற்றுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2020ம் ஆண்டு கல்வான் மோதலைத் தொடர்ந்து இந்தியா, சீனா எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. இதனால் இரு தரப்பு உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி எல்லையில் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டன. கடந்த ஆண்டு இருதரப்பிலும் துருப்புகள் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டதையும் அதன் பின்னர் எல்லைப் பகுதிகளில் அமைதி பேணுவதையும் இரு தலைவர்களும் திருப்தியுடன் குறிப்பிட்டனர். கடைசியாக ரஷ்யாவின் கசானில் நடந்த இரு தரப்பு சந்திப்புக்கு பிறகு இந்தியா, சீனா உறவில் ஏற்பட்டுள்ள நேர்மறையான நிலையான முன்னேற்றத்தையும் இரு தலைவர்களும் வரவேற்றனர்.
இரு நாடுகளும் வளர்ச்சிக்கான பங்காளிகள், போட்டியாளர்கள் அல்ல என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்றும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலா விசாவை மீண்டும் தொடங்குவதன் மூலம் நேரடி விமான சேவை மற்றும் இரு நாட்டு மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.
உலக வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதில் இரு பொருளாதாரங்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது எனக்கூறிய இரு தலைவர்களும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்தவும், வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கவும் உறுதியளித்தனர். மேலும் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள், பயங்கரவாதம் மற்றும் பல்வேறு துறைகளில் நியாயமான வர்த்தகம் போன்ற சவால்களில் பொதுவான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஒப்புக்கொண்டனர்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘சீன அதிபர் ஜின்பிங் உடனான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது. எங்கள் ஒத்துழைப்பு எங்கள் இரு நாடுகளின் 280 கோடி மக்களின் நலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மனிதகுலத்தின் நலனுக்கும் வழி வகுக்கும். இந்தியா, சீனாவின் வெளியுறவுக் கொள்கைகள் சுயமானவை. எங்களின் நட்புறவை 3ம் நாட்டின் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கக் கூடாது’’ என்றார்.
இதைத் தொடர்ந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழு உறுப்பினர் காய் கியையும் மோடி சந்தித்தார். இருதரப்பு உறவுகள் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை பிரதமர் மோடி, காய் உடன் பகிர்ந்து கொண்டார். மாநாட்டின் தொடக்கமாக, பிரதமர் மோடி உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளின் தலைவர்களை அதிபர் ஜின்பிங் அவரது மனைவியுடன் இணைந்து முறைப்படி வரவேற்றார். அனைத்து தலைவர்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். எஸ்சிஓ மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. மாநாட்டின் இடையே இன்று பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.