நான் காலில் விழணும்!
குட் பேட் அக்லியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதால் அதற்காகவும் தயாராகிவருகிறார். இந்த நிலையில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன் பூஜையில் கலந்துகொண்டபோது அஜித் மறுத்தும் ஷாலினி தன் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். உடனடியாக அஜித், “வீட்டுக்குப் போனதும் நான் விழுகணும்” எனச் சொல்லி சிரித்தார். இந்த வீடியோவை ஷாலினி தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, “என் இதயத்தை உருக்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருவதால் வைரலாகியுள்ளது. மேலும் இதற்கு சில பெண்ணியவாதிகள், ‘‘ ஏன் மனைவி மட்டும் தான் பொதுவெளியில் காலில் விழ வேண்டுமா?’’ எனவும் விமர்சனங்கள் எழுகின்றன. அட இதெல்லாமா ஒரு பிரச்னை, அவர்களின் அன்பை மட்டும் பார்க்க வேண்டிய தருணம் இது எனவும் இன்னொரு விதமான ஆதரவும் எழுந்துள்ளது. எனினும் இந்த வீடியோ பார்க்கவே அவ்வளவு அழகாக இருப்பது மட்டும் உறுதி.
வரிக்கு எதிரான குரல்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளால் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை வால்மார்ட் அங்காடியில் வாடிக்கையாளர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுக்குள் வெளிநாட்டுப் பொருட்களைக் கொண்டுவரும் நிறுவனங்கள், அரசுக்கு கட்டாய வரி செலுத்த வேண்டியுள்ளது.இந்த கூடுதல் செலவு, இறுதியில் நுகர்வோர் மீது சுமத்தப்பட்டு, பொருட்களின் விலை அதிகரிக்கிறது. சமீபத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்கு மதி செய்வதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இருமடங்காக டிரம்ப் உயர்த்தினார். இந்நிலையில், அமெரிக்காவின் வால்மார்ட் அங்காடியில் டிரம்ப் விதித்த வரிகளால், இந்திய ஆடை மற்றும் பிற பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதை மெர்சிடிஸ் சாண்ட்லர் என்ற பயனர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். மேலும் ஒரு டாலருக்கு ரூ. 87. 58 என்கிற பண மதிப்பு காரணமாக இது இன்னும் இந்தியத் தொழில் இறக்குமதியை நெருக்கும் என்பதால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.