பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் அநாகரிக சைகை காட்டினாரா?: போலீஸ் தீவிர விசாரணை
பெங்களூரு: பெங்களூரு கேளிக்கை விடுதியில் பெண்களை அவமதிக்கும் வகையில் சைகை காட்டியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மீது புகார் எழுந்துள்ளது. கடந்த நவம்பர் 28ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அங்கிருந்தவர்களை நோக்கி அநாகரிகமான முறையில் சைகை காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இதுகுறித்து காவல்துறையிலும், மாநில மகளிர் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், ‘ஆர்யன் கான் பொது இடத்தில் செய்த இந்தச் செயல், அங்கிருந்த பல பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு மன உளைச்சல் மற்றும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது’ என்றுத் தனித்தனியே குறிப்பிட்டுள்ளார். புகாரின் அடிப்படையிலும், சமூக வலைதளங்களில் பரவிய காட்சிகளை வைத்தும் காவல்துறையினர் தாமாகவே முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து மத்தியப் பிரிவு துணை போலீஸ் கமிஷனர் கூறுகையில், ‘சம்பவம் நடந்த இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம்’ என்றுத் தெரிவித்தார்.
புதிய பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முந்தைய முதற்கட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொள்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால், விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.