வீட்டுக்கே சென்று பாலியல் தொல்லை பயிற்சிக்கு வரும் மாணவர்களின் தாயாரை சீரழித்த கராத்தே மாஸ்டர்: கொலை மிரட்டல் விடுத்ததால் கைது
நெல்லை: நெல்லை அருகே பயிற்சிக்கு வந்த மாணவர்களின் தாயாரை மயக்கி பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த கராத்தே மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். நெல்லை பேட்டையை அடுத்த நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் வகாப் (32). கராத்தேயில் டிப்ளமோ படித்த நிலையில் சுத்தமல்லி, பேட்டை, கோடீஸ்வரன் நகர் ஆகிய பகுதிகளில் கராத்தே வகுப்பு, துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். கராத்தே வகுப்புகளில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதேபோல் டவுன் குற்றால ரோடு, பாளை கே.டி.சி.நகர் பகுதியிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்துல் வகாப்பின் மையத்தில் சுத்தமல்லி இஸ்தீப் நகரைச் சேர்ந்த தொழிலாளியின் 2 குழந்தைகள் கராத்தே படித்து வந்தனர். இவர்களது தாய் தினமும் காலையில் அந்த குழந்தைகளை பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்று விட்டு பயிற்சி முடிந்த பின் அழைத்து செல்வது வழக்கம். அப்போது அப்துல் வகாப் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர், மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் அந்த பெண் பேசுவதை நிறுத்தியதால் சம்பவத்தன்று அவரது வீட்டுக்குச் சென்ற அப்துல் வகாப், அந்த பெண்ணிடம் நான் போன் செய்தபோது ஏன் எடுக்கவில்லை எனக் கூறி அவதூறாக பேசி, தாக்கியதோடு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் அப்துல் வகாப் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து அந்தப் பெண் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதில் அப்துல் வகாப் தினமும் தனது பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களின் தாயாரை நோட்டமிட்டு அதில் சில பெண்களிடம் நைசாக பேசி அவர்களது செல்போன் எண்களை வாங்கி பேசி வந்துள்ளார். அவர்களில் 10க்கும் மேற்பட்டோரை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது. அதில் சிலர் அவராக் வாழ்க்கையே இழந்து உள்ளனர். இதைத் தொடர்ந்து சுத்தமல்லி போலீசார் நேற்று முன்தினம் இரவு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கராத்தே மாஸ்டர் அப்துல் வகாபை நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.