20 பெண்கள் அளித்த பாலியல் புகார்: லண்டனில் பிரபல நடிகர் கைது
லண்டன்: பிரபல ஹாலிவுட் நடிகரான நோயல் கிளார்க் மீது கடந்த 2021ம் ஆண்டு, 20க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ‘தி கார்டியன்’ பத்திரிகை மீது அவர் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் தோல்வியடைந்தார். குற்றச்சாட்டுகள் ‘பெரும்பாலும் உண்மையே’ என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், பத்திரிகையின் சட்ட செலவுகளுக்காக சுமார் 60 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தவும் அவருக்கு உத்தரவிட்டது.
இந்த குற்றச்சாட்டுகளால், அவருக்கு வழங்கப்பட்ட பாஃப்டா விருது உள்ளிட்ட கவுரவங்கள் திரும்பப் பெறப்பட்டன. முன்னதாக, இதுதொடர்பான முதல்கட்ட போலீஸ் விசாரணையானது, குற்றவழக்கு பதிவு செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கடந்த 2022ம் ஆண்டு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், புதிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, லண்டன் கென்சிங்டனில் உள்ள நோயல் கிளார்க்கின் வீட்டில் காவல்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி அடங்கிய பெட்டிகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நோயல் கிளார்க், பின்னர் விடுவிக்கப்பட்டார். கைதுக்கான காரணத்தை காவல்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், கடந்த 1ம் தேதி முதல் தொடங்கப்பட்ட புதிய விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.