மண்ணச்சநல்லூர் பகுதிகளில் சமயபுரம் சந்தையை குறிவைத்து கால்நடைகள் தொடர் திருட்டு
*போலீஸ் இரவு ரோந்தை தீவிரப்படுத்த கோரிக்கை
சமயபுரம் : மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பைஞ்ஞீலீ , வெங்கங்குடி, இனாம் கல்பாளையம், இனாம் சமயபுரம், கொணலை, கரியமாணிக்கம் மற்றும் மற்ற ஊராட்சிகளை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளன. அப்பகுதிவாசிகள், 30,000த்துக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். மேற் கண்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவில் கால்நடைகள் திருட்டு அதிகரித்து உள்ளன.
இரவில் லோடு ஆட் டோ, பைக்கில் வரும் கால்நடை திருடும் கும்பல் இதுவரை 30க்கும் மேற்பட்ட மாடுகளையும், 80க்கும் மேற்பட்ட ஆடுகளையும் திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்தில் திருவரங்கபட்டி, திருப்பைஞ்ஞீலீ, ஈச்சம்பட்டி, வீ.துறையூர், சமயபுரம், ஈச்சம்பட்டி, சிறுகனூர் ஊராட்சிக்கு உட் பட்ட பகுதிக்கு மேய்ச்சலு க்கு சென்ற பசுக்கள், ஆடுகளை லோடு ஆட்டோவில் வந்த திருடி சென்றுள்ளனர்.
இதுகுறிப்பாக வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் சமயபுரம் ஆட்டு சந்தையை குறிவைத்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் ஆடு மாடுகளை கொள்ளையர்கள் திருடி செல்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:
வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகள் திருடப்படுவது வேதனையளிக்கிறது. திருடர்கள் நள்ளிரவு 12:00 மணி முதல் 3:00 மணிக்குள்ளாக வாகனத்தில் வருகின்றனர். திருடப்படும் கால்நடைகளை டாடா ஏஸ் , பைக் மற்றும் ஸ்கூட்டி வாகனத்தில் கடத்தி செல்கின்றனர்.
எனவே சமயபுரம் மண்ணச்சநல்லூர் கொள்ளிடம் போலீசார் அந்தந்த பகுதியில் ஊராட்சி மற்றும் உள்ளடக்கிய கிராமங்களில் இரவில் அதிக ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே இதுபோன்ற திருட்டை தடுக்க முடியும் என்றனர்.