தனிக்கட்சி தொடங்க திட்டமிட்ட அண்ணாமலைக்கு பாஜ மிரட்டலா? பரபரப்பு பேட்டி
கோவை: தனிக்கட்சி தொடங்க திட்டமிட்ட அண்ணாமலைக்கு பாஜ மிரட்டல் விடுத்ததா? என்பது குறித்து அண்ணாமலை பரபரப்பு பதில் அளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் இதுவரை 8 முறை இந்தியா முழுவதும் நடந்துள்ளது. தமிழ்நாட்டிலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தியுள்ளோம். யாராவது வடஇந்தியாவில் இருந்து வந்தவர்கள், தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர தகுதி உள்ளதா? இதைத்தான் ஒடிசாவில் 2024ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பேசினார்கள். தமிழ்நாட்டு மக்களை மோடி அவமானப்படுத்தவில்லை. ஒடிசாவை யார் ஆள்வது என்ற கேள்விதான் கேட்கப்பட்டது. பாஜ கூட்டணி தொடர்பாக கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. நானும் பாஜ தொண்டராக இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை கருத்துடன் இருக்கிறோம். அதற்கான நேரமும், காலமும் இன்னும் இருப்பதாக நான் பார்க்கிறேன்.
அமித்ஷா, மோடி ஒரு தூய அரசியலை தருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் பாஜவில் இணைந்து பயணம் செய்து கொண்டுள்ளேன். இல்லையெனில் வேலையை விட்டு வர அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் நல்ல அரசியலை தரும் கூட்டணி அமையும் என்ற முழு நம்பிக்கையுடன் ஒரு தொண்டனாக என் வேலையை நான் செய்கிறேன். கூட்டணி குறித்து கருத்தை சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. ஒரு சாதாரண தொண்டனாக இருக்கிறேன். அரசியல் கட்சியில் யாரையும் துப்பாக்கி வைத்து மிரட்டி இருக்க வைக்க முடியாது. எங்களது கை காசை செலவு பண்ணி அரசியலில் இருக்கிறோம்.
எல்லோரும் மக்களுக்காக வேலை பார்க்கிறோம். பிடித்தவரை அரசியல் கட்சியில் இருந்து மக்களுக்காக வேலை பார்க்க போகிறோம். இல்லையென்றால் சமூக இயக்கமாக மாற்றி, அதே வேலையை மக்களுக்கு செய்ய போகிறோம். நான் பராம்பரிய அரசியல்வாதி அல்ல. இடத்திற்கு தகுந்த மாதிரி பேச எனக்கு தெரியாது. சபை நாகரீகம் எல்லாம் எனக்கு தெரியாது. பதவி எல்லாம் வெங்காயம் மாதிரி. அதை உரித்தால் ஒன்றும் இருக்காது. பதவி இருந்தால் தான் வேலை செய்ய முடியுமா? என்னை பொறுத்தவரை சுத்தமான, நேர்மையான அரசியல் வேண்டும். வயது, நரம்பு சரியாக இருக்கும் போது தான், இப்படி எல்லாம் பேச முடியும்.
60 வயதில் பேச முடியாது. மாற்றம் நடக்கும் என நம்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன். எந்த பேக்கப்பும் இல்லாத என்னால், ஒரு தனிக்கட்சி எல்லாம் துவங்கி நடத்தி விட முடியுமா? எனக்கு என் உயரம் தெரியும். எப்படி பயணம் செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஒரு முதல் தலைமுறை அரசியல்வாதியாக, விவசாயியாக நான் மாற்றத்திற்காக தொடர்ந்து போராடுகிறேன். சில நேரம் என் மனசாட்சிக்கு எதிராகவும் பேசுகிறேன். மனசாட்சி ஒன்று சொல்கிறது. வாய் ஒன்று சொல்கிறது. தலைவர்கள் சொல்வதற்காக, சபை நாகரிகத்திற்காக நான் அப்படி சில இடங்களில் பேசுகிறேன். இருந்தாலும் சில விஷயங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம். நல்லது நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
* கிளம்ப போறேன்...
‘பாஜ கூட்டணியில் இன்று யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது, யார் எப்படி இருக்க வேண்டுமென்ற கருத்தை சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. ஒரு சாதாரண தொண்டனாக இருக்கிறேன். பிடித்திருந்தால் இருப்பேன், பிடிக்கவில்லை என்றால் கிளம்ப போறேன். அவ்வளவு தான். என் வேலையை விவசாயத்தை பார்த்துக் கொண்டு இருக்க போகிறேன்’ என்றார்.
* பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு அதிமுக தலைவர்களுக்கு எச்சரிக்கை
அண்ணாமலை கூறுகையில், ‘டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையனை நான் தான் சேர்த்தேன் என நான்கு பேர் எழுதுவார்கள். நீங்கள் பசும்பொன் போகலையா? அந்த 3 பேர் போனார்கள். நான் பின்னால் இருந்து இயக்குகிறேனா என கேட்பார்கள். என் பொறுமைக்கும் ஒரு எல்லையுள்ளது. நான் பேச ஆரம்பித்தால் பல விஷயங்கள் பேசிவிடுவேன். 2 முறை விமானத்தில் செங்கோட்டையனை சந்தித்தேன். அப்போது பொதுவாக தான் பேசினோம். அவரது அரசியல் வாழ்க்கை அவருடையது. என்னுடைய அரசியல் வாழ்க்கை என்னுடையது. இன்று நான் அதிமுக பற்றி பேசாமல் இருக்கிறேன். ஆனால் அதிமுகவில் இருக்கும் எத்தனையோ தலைவர்கள் என்னை திட்டிக்கொண்டுதான் உள்ளார்கள்.ஆனாலும் அமித்ஷாவிற்கு கொடுத்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு நான் இருக்கிறேன். திருப்பி பேச எவ்வளவு நேரமாகும்? நான் வார்த்தை கொடுத்துள்ளதால், அமைதியாக இருக்கிறேன். எல்லோருக்கும் ஒரு லட்சுமண ரேகை, எல்லை உள்ளது. அந்த எல்லையை கடக்கக்கூடாது என நான் இருக்கிறேன் என்றார்.