ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு:கோரிக்கை மனுவையும் அளித்தனர்
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்களான திருமாவளவன், பெ.சண்முகம், முத்தரசன் ஆகியோர் திடீரென சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற கோரி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழக அரசியலை பொறுத்தவரை திமுக கூட்டணி வலுவாக அமைந்துள்ளது. தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சண்முகம் ஆகிய மூவரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தலை எதிர்கொள்வது, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, நெல்லை கவின் ஆணவக் கொலை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விவாதமாகியுள்ள நிலையில், தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என மூன்று கட்சி தலைவர்களும் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பான மனுவையும் அவரிடம் அளித்துள்ளனர். தனிச் சட்டம் கொண்டு வருவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதை தொடர்ந்து, ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. எனவே வரவுள்ள சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இது தொடர்பான சட்டம் கொண்டு வருவது குறித்து முதல்வர் சந்திப்பின் போது வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.