செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு: விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதற்கு பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், சென்னை மாநகர போக்குவரத்து முன்னாள் மேலாண் இயக்குனர் கே.கணேசன் உள்ளிடோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைக்கக்கோரி சென்னை மாநகர போக்குவரத்து கழக முன்னாள் மேலாண் இயக்குனர் கே.கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், மூல வழக்கின் விசாரணையும், அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாரயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கே.கணேசனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.