தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பான நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எத்தனை? தமிழக, புதுச்சேரி அரசுகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்கூட்டி விடுதலை குறித்த அரசின் கொள்கைகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.இந்த வழக்கு, நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களை தாமாக முன் வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். பின்னர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எத்தனை கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தண்டனை குறைப்பு விண்ணப்பங்கள் எத்தனை நிலுவையில் உள்ளன, முன்கூட்டி விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து எத்தனை கைதிகளுக்கு எதிராக அறிக்கை உள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.