மூத்த குடிமக்களின் நலன் மேம்படுத்துவது தொடர்பாக உறுதி மொழி எடுக்க வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல்
சென்னை: மூத்த குடிமக்களின் நலன் மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுக்க வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கை விவரம்: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில், ‘கண்ணியத்துடன் முதுமை’ எனும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நம்நாட்டின் மூத்த குடிமக்களுக்கு மதிப்பளிக்கவும், அவர்களை கவனித்துக் கொள்ளவும் அனைத்து மக்களும் உறுதி ஏற்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த உறுதிமொழியை ஏற்றியுள்ளார். நம்நாட்டின் முதியோர் நலனுக்காக அனைத்து குடிமக்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். மூத்த குடிமக்களின் நலன் மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துவது அவர்களின் வாழ்நாள் அன்பு, தியாகம் மற்றும் ஞானத்துக்கு மதிப்பளிக்க கூடியதாகும். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ‘கண்ணியத்துடன் முதுமை’ குறித்த உறுதிமொழி ஏற்பதை உறுதிசெய்ய வேண்டும். இதுதொடர்பான வாசகங்கள், கல்லுாரி வளாகத்தில் இடம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.