செங்கோட்டையன் தீவிர ஆதரவாளர் பண்ணாரி எம்எல்ஏ திடீர் அணி தாவல்: புதிய மாவட்ட பொறுப்பாளருடன் சந்திப்பு
சத்தியமங்கலம்: செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராக இருந்த பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, திடீரென அணி தாவி, எடப்பாடி நியமித்த புதிய மாவட்ட பொறுப்பாளரை சந்தித்து வாழ்த்து கூறினார். முன்னாள் அமைச்சரும் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன், ‘பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்’ என மனம் திறந்து கருத்து தெரிவித்ததால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரையும், ஆதரவாளர்கள் திருப்பூர் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்பட 8 பேரையும் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாவட்ட பொறுப்பாளராக மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே. செல்வராஜ் புதிதாக நியமனம் செய்யப்பட்டார்.
செங்கோட்டையன் பேட்டியளிப்பதற்கு முன்பு வரை அவருக்கு பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ பண்ணாரி ஆதரவாகவே இருந்து வந்தார். ஆனால் தற்போது அணி மாறியுள்ளார். பண்ணாரி எம்எல்ஏ நேற்று காலை திடீரென பவானிசாகர், அந்தியூர் தொகுதி நிர்வாகிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏ.கே.செல்வராஜை அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதே போல செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து வந்த முன்னாள் எம்பி காளியப்பன், கோபி நகர செயலாளர் கணேஷ், டிஎன்.பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹரிபாஸ்கர், கோபி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்திப்பதை தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.