டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் செங்கோட்டையன்?.. இன்று டிடிவி தினகரனை சந்திக்க உள்ளதாகவும் தகவல்
டெல்லி: டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி என பல அணிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் கடந்த 10 தேர்தல்களில் அதிமுக படுதோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமே அதிமுக பிரிந்து கிடப்பதுதான் என்று அதிமுக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
அதிமுகவை வலுப்படுத்த கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் தெரிவித்து, எடப்பாடி பழனிச்சாமி 10 நாட்கள் கெடு விதித்தார். செங்கோட்டையன் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது. இதனிடையே அவரது ஆதரவாளர்களும் கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்தனர். மேலும் 9 ஆம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஏ.கே. செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். ஹரித்துவர் ராமர் கோவிலுக்கு செல்கின்றேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை.
மனம் சரியில்லாததால் கோயிலுக்கு செல்கிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு சென்ற செங்கோட்டையன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை செய்தார். அமித்ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லியில் ஒன்றிய அமைச்சர் நிர்மலாவை சந்தித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெல்ல முடியும் என நிர்மலாவிடம் செங்கோட்டையன் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து இன்று தமிழகம் திரும்பும் செங்கோட்டையன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.