செங்கோட்டையன் தலைமையில் 5வது அணி உருவாகலாம் கூட்டணி வைக்கும் கட்சியை கூறுபோடுவதுதான் பாஜ வழக்கம்: செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை: அதிமுகவில் செங்கோட்டையன் தலைமையில் 5வது அணி உருவாகலாம். கூட்டணி வைக்கும் கட்சியை கூறு போடுவது தான் பாஜ வழக்கம் என்று செல்வப்பெருந்தகை கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்த போது ஏன் அவர் வாய் திறக்கவில்லை. அவர் 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்தார். அப்போது ஏன் அதுபற்றி பேசவில்லை? இது சந்தர்ப்பவாத அரசியல். எந்த ஊருக்கு செல்கிறாரோ அந்த ஊருக்கு ஏற்ற வகையில் பேசி வருகிறார். அதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்னை என்றாலும், அதில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். பாஜ எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறார்களோ அந்த கட்சியை கூறு போடுவது தான் அவர்களின் வழக்கம்.
ஏற்கனவே அதிமுகவை 4 ஆக வைத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமை, சசிகலா தலைமை, டி.டி.வி.தினகரன் தலைமை, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. இப்போது 5வதாக செங்கோட்டையன் தலைமையில் ஒரு அணி உருவானாலும் உருவாகலாம்.
பாமகவை பிளவுபடுத்தியது பாஜதான். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் உத்தவ் தாக்கரேவுக்கு பதிலாக ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கி, இப்போது அவரையும் விட்டுவிட்டு பாஜ ஆட்சி அமைத்திருக்கிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கை, பாஜவின் மாடல். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, அகில இந்திய காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் பவன் கேரா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.